திரை பிரபலங்கள் சூட்டிங் செல்லும்போது நடைபெறும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு  கூட அனுஷா ரெட்டி, மற்றும் பார்கவி ஆகிய நடிகைகள் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய போது, கார் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தனர்.

இதைதொடந்து, தற்போது தெலுங்கு பட இளம் நடிகர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி, இந்த விபத்தில் துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தெலுங்கில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா, இயக்கிய 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சுதாகர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'நவ்வு தொப்புறா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக குன்னூரில் இருந்து ஹைதராபாத் சென்றுள்ளனர், நடிகர் சுதாகர், நடிகை நித்யா ஷெட்டி மற்றும் இயக்குனர் ஹரிநாத் ஆகியோர். அப்போது ஓட்டுநர் அருகே வந்த டிராக்டரை ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார். காரை அவர் திரும்பியபோது,  நிலைதடுமாறி ரோட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த துப்புரவு பணியாளர் லக்ஷ்மி (35 ) என்பவர் மீது கார் மோதியது.

இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகர் சுதாகர், நடிகை நித்யா ஷெட்டி, மற்றும் இயக்குனர் ஆகியோர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இயக்குனர், ஹரிநாத் கூறுகியில்... ட்ராக்ட்டரை முந்தும்போது, அந்த பெண் திடீர் என நடுவில் வந்து விட்டார், அவர் மீது கார் மோதிவிட்டது. ஆனால் இப்படி ஆகும் என சற்றும் எதிர்பார்கவில்லை. இந்த விபத்தை ஏற்படுத்தியது, நடிகர் சுதாகர் என வதந்திகள் பரவி வருகிறது என கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.