விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர முத்தையா முரளிதரன் தொடர்ந்து விஷம் கக்கி வருகிறார். எனவே அவரது பயோபிக் படமான ‘800’ல் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்த நிலையில், ’முரளிதரன் அவ்வாறெல்லாம் பேசவில்லை.அவரது முழுப் பேச்சையும் கேட்கக் கூடப் பொறுமையற்று முகநூலில் பொங்கித் தணிந்தோர் வெட்கமுறட்டும்’என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் ஷோபா சக்தி.

கொழும்புவில் நேற்று முன் தினம்  கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முரளிதரன்,’தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்’என்று பேசியுள்ளதாக தமிழ் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் அச்செய்திகள் பொய்யானவை என்று முகநூலில் பதிவிட்ட ஷோபா சக்தி யூடியூபில் முரளிதரன் பேசிய லிங்கை வெளியிட்டுள்ளார்.அதில் பேசியுள்ள முரளிதரன் "நான் அச்சத்திற்குள் வாழ்ந்த தமிழன். 1977 இன வன்முறையில் எங்கள் குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனது உறவுகளில் 80 வீதமானோர் இந்தியாவுக்கு ஓடிப் போய்விட்டார்கள். கடந்த காலங்களில் அரசும் தவறிழைத்திருக்கிறது. புலிகளும் தவறிழைத்திருக்கிறார்கள். தமிழர்கள் அச்சத்திற்குள் வாழ்ந்தோம். என் வாழ்வின் முக்கியமான நாள், போர் முடிவுக்கு வந்த நாளே. ஒன்பது வருட அமைதிக்குப் பின்பு இப்போது மறுபடியும் நம்மை அச்சம் சூழ்ந்திருக்கிறது. இந்த நாட்டை அச்சத்திலிருந்து காப்பாற்றக்கூடிய அரசியல் தலைமையே நமக்குத் தேவை. அவர் யாரென நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அதைத் தேர்தல் முடிவு செய்யட்டும்."

இதுதான் முரளி பேசியதின் சாரம் (காணொளி இணைப்பில்). ஒரு விளையாட்டு வீரரிடம் இதைவிடப் பண்பட்ட பேச்சை எதிர்பார்க்க முடியாது. நம்முடைய தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் அநேகரைவிடச் சிறப்பாகவே முரளி பேசியிருக்கிறார். அவரது முழுப் பேச்சையும் கேட்கக் கூடப் பொறுமையற்று முகநூலில் பொங்கித் தணிந்தோர் வெட்கமுறட்டும்.இந்தப் பேச்சைப் பொறுத்தளவில் எனக்கிருக்கக்கூடிய ஒரே விமர்சனம், பொடியன் விளையாட்டு விளையாட்டென்று பந்தெறிந்து கொண்டு திரிந்ததால் என்னைப் போலவே ஆங்கிலத்தைச் சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டார் என்பது மட்டுமே...என்று பதிவிட்டிருக்கிறார் ஷோபா சக்தி...