Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா, ரஜினி படங்களுக்கு கதை,வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்...

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 87 வயதிலும் ஓயாமல் எழுதி வந்த, மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
 

writer maharishi passed away
Author
Chennai, First Published Sep 28, 2019, 11:34 AM IST

பிரபல நாவலாசிரியர், எழுத்தாளர் / திரைப்பட கதை வசன கர்த்தா, மகரிஷி இன்று சேலத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால்  காலமானார் . அவருக்கு வயது 87. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசியாக நடித்த ‘நதியைத் தேடிவந்த கடல்’படத்தின் நாவலாசிரியரும் இவரே.writer maharishi passed away

இவரது புவனா ஒரு கேள்வி குறி, நாவல்தான் ரஜினி காந்த் நடிக்க திரைப்படமானது. வட்டத்துக்குள் சதுரம் நாவலும் திரைப்படமானது இரண்டு படங்களையும் டைரக்டர் SP. முத்துராமன் இயக்கியிருந்தார். K.S .கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் ஏவி எம் ராஜன் நடிக்க என்ன தான் முடிவு என்ற பெயரில் இவரது நாவல் திரைப்படமானது. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ற பெயரிலும் இவரது நாவல்  திரைப்படமானது. இப்படி இவரதுபல நாவல்கள் திரைப்படமானது.

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 87 வயதிலும் ஓயாமல் எழுதி வந்த, மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன.

எனினும், தனிப்பட்ட ஓர் எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.writer maharishi passed away

ஒரு மாலைநேர மழை நாளில், எழுத்தாளர் மகரிஷியை, சேலம் ராஜா எக்ஸ்டென்ஷன் தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். முன்தகவல் இல்லாத திடீர் சந்திப்பு அது. வழக்கமான காவி ஜிப்பா உடையில் இருந்தார். தோழர்கள் ராஜலிங்கம், வின்சென்ட் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அவருடனான உரையாடலில் இருந்து…

 மகரிஷி என்பது எதன் குறியீடு?

என் பெற்றோர் தஞ்சாவூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் – ஆர். பத்மாவதி. பெற்றோர் வைத்த பெயர், பாலசுப்ரமணிய அய்யர். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆன்மீகத்திலும், எழுத்திலும் ஆர்வம் அதிகம். மின்வாரியத்தில் ரிக்கார்டு கிளர்க் ஆக பணியாற்றினேன். எழுதுவதற்கு வசதியாக, எனக்கு கிடைத்த பதவி உயர்வுகளையும்கூட மறுத்துவிட்டேன்.என் எழுத்திலும் ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருக்கும். அதனால் ஆன்மீகத்தோடு தொடர்புடைய சற்றே வித்தியாசமான, யாரும் ‘ஹெஸிடேட் செய்ய முடியாத பெயராக இருக்க வேண்டும் என்பதால், பாலசுப்ரமணி அய்யரான நான் ‘மகரிஷி’யாக மாறிவிட்டேன்.writer maharishi passed away

 முதல் நாவல் அனுபவங்கள்…?

முதன்முதலில், ‘பனிமலை’ என்ற நாவல் எழுதினேன். அடிப்படையில் நல்லவனான ஒருவன், தான் செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. தான் விடுதலை ஆகி வந்தபின், தான் சிறைக்குச்செல்ல காரணமான ஒருவனை பழிவாங்க எண்ணுகிறான். ஆனால், அந்த கெட்டவனோ, நல்லவனின் சகோதரனின் முன்னேற்றத்துக்கு ஏணிப்படியாக இருப்பது தெரிகிறது.

எரிமலையான ஒருவன், எப்படி பனிமலையாக மாறினான் என்பதுதான் கதை. இந்த நாவல், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘என்னதான் முடிவு?’ என்ற பெயரில் படமாக வந்தது. என் முதல் நாவலே படமாக வந்தது. இதற்காக அப்போது எனக்கு ரூ.7000 ஊதியம் கொடுத்தார்கள். அது ஒரு புகழ்ப்பெற்ற தோல்விப்படம்.

திரைப்படமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாவல் எழுதுவீர்களா?

(லேசான புன்னகையுடன்) அப்படித்தான் பலபேர் கேட்கிறார்கள். படத்துக்காக எந்த நாவலும் எழுதப்படல. கதை எழுதித்தரும்படி எந்த இயக்குநரும் தேடியும் வரல. ஆனால், என் நாவல்கள்தான் அதிகமாக திரைப்படமாகி உள்ளன. அதிகமாக கதை திருட்டுக்கு உள்ளாகி இருக்கின்றன. மாணவர்கள் அதிகளவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வதும் என் நாவல்கள்தான்.நான் ரொம்ப சின்சியரான சிவபக்தன். என் படைப்புகள் அனைத்தும் சிவன் சொத்துக்கள். என் அனுமதியின்றி கதையை திருடி படமாக்கியவர்கள் நல்லாவே இல்ல. நல்லாவும் இருக்க மாட்டாங்க.

(இவருடைய நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களையும், இயக்குநர்களையும் ‘ஆப் தி ரெக்கார்ட்’ ஆக சொன்னதால் அவை பிரசுரிக்கப்படவில்லை).

படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை?

லா.ச.ரா, நா.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, மௌனி, அகிலன், இடதுசாரி எழுத்தாளர் தி.க.சி, இந்திரா சவுந்தர்ராஜன், விமர்சகர்கள் கா.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகிய மூத்த படைப்பாளிகளுடன் பரிச்சயம் உண்டு.அப்போது, எழுத்தாளர்கள் என்றால் மிகுந்த மரியாதை இருந்தது. படைப்பாளிகளின் எழுத்திலும் சின்சியாரிட்டி இருந்தது. இப்போதுள்ள படைப்பாளிகள் யாருடனும் எனக்கு தொடர்பு இல்லை.

 இப்போதும் உங்கள் படைப்புக்கு வரவேற்பு இருக்கிறதா?

வரவேற்பு இருப்பதால்தான் 130 நாவல்கள் எழுத முடிந்துள்ளது. கடைசியாக ‘வேதமடி நீ எனக்கு’ என்ற நாவலை எழுதினேன். இது, அதர்வண வேதத்தை அடிப்படையாக வைத்து, நீண்ட ஆராய்ச்சி செய்தபின், எழுதி முடித்தேன்.மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவரை மீட்கும் ரகசியம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. வேதங்களைப் பற்றியது என்பதால் முன்னணி பதிப்பகங்கள்கூட இதை அச்சிட முன்வரவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். கடைசியாக செண்பகா பதிப்பகம், என் நாவலை அச்சிட முன்வந்தது.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதை ஒரு படைப்பாளியாக எப்படி கருதுகிறீர்கள்?

 வேதங்களை பெண்கள் படிக்கக்கூடாது என்பதெல்லாம் பொய். திணிக்கப்பட்ட கருத்து. அதுபோலத்தான் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பதும். வேதங்களில் பெண்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.பெண்கள் இல்லாமல் யாகம் நடத்த முடியாது. கணவன், மனைவியாக கலந்து கொண்டால்தான் யாகம் நடத்த முடியும். அப்படி இருக்கும்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கலாம். ஆகம விதிப்படி, பெண்கள் ‘தீட்டு’ காலத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது.

கடைசியாக திரைப்படமான உங்கள் நாவல் என்ன?

நான் எழுதிய, ‘நதியை தேடிவந்த கடல்’ நாவல், அதே பெயரில் படமானது. ஜெயலலிதா நடித்த கடைசி படம் அதுதான். அந்தப்படத்திற்காக, எனக்கு ரூ.22 ஆயிரம் ஊதியம் கொடுத்தனர்.

சாஹித்ய அகாடமி போன்ற விருதுகள் எதுவும் பெறாதது வருத்தமாக இல்லையா?

பொதுவாக, விருதுகள் மீது அபிப்ராயம் கிடையாது கொடுத்தா வாங்கிக்குவேன். விருதுகளைத் தேடிப்போறதில்ல. (சிரித்தவாறே) ஏன் விருது கிடைக்கலைனு நான் உங்களத்தான் (ஊடகத்தினரை) கேட்கணும்.

இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்க முடிகிறதே எப்படி?
‘உயிர்த்துடிப்பு’ என்ற என்னுடைய நாவலில் ‘வயதே வியாதி’ எனச்சொல்லி இருப்பேன். மூப்பு என்பதை தவிர்க்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் நல்ல ‘பிஹேவியர்’ முக்கியம். காலை 6.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.பல் தேய்த்து, குளித்துவிட்டு காலை டிபன் முடித்து விடுவேன். உணவுப்பழக்கத்தில் நான் ரொம்ப ஸ்டிரிக்ட். யாராவது என்னைப் பார்க்க வந்தால்கூட, அவர்களை உட்கார வைத்துவிட்டு, 8 மணிக்கு இரவு உணவை முடித்து விடுவேன்.

இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டதும் இல்லை. தினமும் ஒரே ஒருமுறை காபி. அவ்வளவுதான். பிறரின் உள் விவகாரங்களை ஆழமாக தெரிந்துகொள்வதால், நாம் ஏன் வீணாக அதிர்ச்சிக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக வேண்டும்? அதனால், டி.வி.கூட பார்ப்பதில்லை. நாம ‘கரெக்டாக’ இருந்தா எல்லாம் சரியாக இருக்கும்.

இளம் படைப்பாளிகளுக்கு சொல்ல விரும்புவது என்ன?

நான் யாருக்கும் அட்வைஸ் பன்றதில்ல. ஆனால், யாராக இருந்தாலும் ஏதோ பரபரப்புக்காக மேம்போக்காக எழுதாமல், எதையும் ஆழமாக தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது. எழுத்தாளர்களுக்கு எப்போதும் சின்சியாரிட்டி முக்கியம். வாசிப்பு பழக்கமும் அவசியம்.130 நாவல்கள் படைத்த மூத்த எழுத்தாளர், பொதுவெளியில் கவுரவிக்கப்படாமல் இருப்பதே தமிழனின் ஆகப்பெரிய சாபக்கேடு.(2016 -ஜூலை, புதிய அகராதி திங்கள் இதழில் இருந்து…)

 

Follow Us:
Download App:
  • android
  • ios