பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், சினிமாவுக்கும் அதிகமான தொடர்பு உண்டு. அவர் எழுதிய பல நாவல்கள் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.

“காவல் தெய்வம், யாருக்காக அழுதாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். ஊருக்கு நூறுபேர்” ஆகிய கதைகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதில் அவர் இரண்டு கதைகளை இயக்கவும் செய்திருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதிய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற நாவல் திரைப்படமாகிறது.

‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்டேஷ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து இயக்குனர் ஜி.வெங்கடேஷ்குமார் கூறியது:

“‘உனக்குள் நான்’ படம் மனிதர்களின் மனசாட்சியைப் பற்றி பேசியது. ‘லைட்மேன்’ படம் சினிமாவில் இருக்கும் லைட்மேன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது. ‘நீலம்’ படம் இலங்கை தமிழர்களின் வாழ்வுப் பிரச்சனையை பற்றி பேசியது.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படம் ஜெயகாந்தன் அவர்கள் காட்டிய மனித உணர்வுகளை பேசப் போகிறது.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும்” என்று கூறினார்.