நகைச்சுவை எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என்று பன்முகத்திறமை பெற்ற ‘கிரேசி’ மோகன் மாரடைப்பால் மறைந்ததாக அறிகிறேன்.

‘அய்யா. அம்மா.. அம்மம்மா’ –

இந்த நகைச்சுவை நாடகத்தை எத்தனை முறை கேட்டு மகிழ்ந்திருப்பேன் என்று கணக்கே இல்லை. அத்தனை பிடித்தமான நாடகம். யார் எழுதியது என்பதை முதலில் அறிந்திருக்கவில்லை.பிறகுதான் கிரேசி மோகன் எழுதியது என்பதை அறிந்தேன். அவரது துவக்க கால எழுத்துக்களில் ஒன்று. ‘காத்தாடி ராமமூர்த்தியும் டெல்லி கணேஷூம்’ தங்களின் திறமையால் இந்த நாடகத்தை இன்னமும் சிறப்பாக்கியிருப்பார்கள்.

இதிலிருந்து துவங்கி கிரேசி மோகனி்ன் அசாதாரணமான நகைச்சுவைத்திறமையை எத்தனையோ முறை கண்டு வியந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நினைத்து நினைத்து சிரிக்க வைத்த எத்தனையோ தருணங்கள் இவரது எழுத்தால் உண்டானது. குறிப்பாக கமலின் திரைப்படங்களோடு இவர் கைகோர்த்த பிறகு, அந்த திரைப்படங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயத்தை அல்லது வசனத்தைக் கண்டு சிரிப்பேன்.

எப்படி இதை முன்னர் தவற விட்டோம் என்று திகைப்பாக இருக்கும். அத்தனை நுட்பமான நகைச்சுவைகள் ஒவ்வொரு காட்சியிலும் இறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உறுத்தலாகத் தெரியாது என்பதுதான் கிரேசியின் திறமை.நண்பர் EraMurukan Ramasami -ன் வழியாக வெண்பா எழுதுவதிலும் அவர் திறமையும் ஆர்வமும் மிக்கவர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்வேன்.

கிரேசி மோகனின் இந்த திடீர் மறைவு பற்றி கேள்விப்படும் போது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. எத்தனையோ முறை சிரிக்க வைத்த ஆசாமி இந்த ஒருமுறை அதைச் செய்யத் தவறி விட்டார்.
முகநூலில்...எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.