நீண்ட நெடும் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சமாதானமாகி சேர்ந்து வாழத்துவங்கிய காமெடி நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும் வாட்ஸ் அப் குரூப்பில் அவமானப்படுத்துவதாகவும் பாலாஜியின் மனைவி நித்யா போலீஸில் புகார் செய்துள்ளார்.

குளத்தூர் சாஸ்திரி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தாடி பாலாஜி (45). திரைப்பட நடிகர். இவரது மனைவி  நித்யா (32). இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார்.  சில வருடங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகர் கமலஹாசன் மற்றும் சிலர் இருவரையும் அழைத்து  சமாதானம் செய்ததை தொடர்ந்து இருவரும் மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த தாடி பாலாஜி, மனைவி நித்யா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் தாடி பாலாஜி தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றார்.

இந்நிலையில் நேற்று மாதவரம் காவல் நிலையத்துக்கு வந்த நித்யா புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தன்னுடைய கணவன் தாடிபாலாஜி தன்னை ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும், வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாகவும் கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய நித்யா , ’பிக் பாஸ்  நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது நடிகர் கமல் உட்பட பலர் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதன் பேரில் இருவரும் சமரசம் செய்து கொண்டோம். சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். 

தற்போது புதிய பெண்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் தலைவியாக உள்ளேன். இது அவருக்கு பிடிக்கவில்லை. உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிடு என்று கூறி சண்டையிட்டு என்னை கொடுமைப்படுத்தினார். மேலும் என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர். இதனால் மனமுடைந்து மிகவும் கவலை அடைந்துள்ளேன். எனவே இதுபற்றி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும்’ என்றார்.