தலித்களிடம் எப்படி நிலம் இல்லாமல் போயிருக்கும்? எனக்கு ஏன் நிலம் இல்லை என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.  

சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், மீண்டும் ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர், ‘’ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது. ரஞ்சித் அல்லாதவர்கள் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் பேசும்போது அமைதியாக இருந்த உலகம் ஊடகம் ரஞ்சித் பேசும்போது ஏன் விழிப்படைந்தது?  ராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என்று கேட்கிறார்கள். ஆனால், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார். வாங்க விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார். ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடையுறானுங்க.    

இந்து தேசியம் பேசுகிறவர்கள்தான் முதலில் கொதிப்படைகிறார்கள். நீ மட்டும்தான் கொதிப்பியா என்று தமிழ்தேசியம் பேசுபவனும் கொதிப்படைகிறான். ராஜராஜன் பற்றி நான் 13 நிமிடங்கள்தான் பேசினேன். அதை எடுத்து இவ்வளவு பெரிய விவாதத்திற்கு வித்திட்ட மீடியாக்களுக்கு நன்றி. குறிப்பாக நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த விவாதம் தேவைதான். ஏன் இந்த விவாதம் தேவை என்றால்...ஏன் எனக்கு நிலம் இல்லை? இதுதான் எளிமையான கேள்வி.

இவரு ஜமீன் பரம்பரை இவருகிட்ட ஒருந்து நிலத்தை எடுத்துக்கிட்டாங்களாம் என்று ஒருவர் பேசுறாரு. தலித்துக்கு ஏது நிலம் என்று ஒருவர் பேசுறாரு. தலித்கிட்ட நிலம் இல்லை என்று உன்னால் எப்படி பேச முடியுது. தலித்கிட்ட எப்படி நிலம் இல்லாமல் போயிருக்கும்? 

நான் வந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லு. நான் பேசியது மூலமாக வழக்கை தொட்டிருக்கிறேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அதற்காக நான் பேசவில்லை என்று எங்கேயும் மறுக்கவில்லை. நான் அம்பேத்கரின் வளர்ப்பு.  எவனுக்கும் பயப்படமாட்டேன். நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே. எனக்கு குரலே கிடையாதா? என் குரலை பதிவு செய்வேன். என்னை கோப்படுத்தாமல் பார்த்துக்கோங்க..’’என்று ஆத்திரமாக பேசியது மீண்டும் சர்ச்சையாகி வருகிறது.