பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக புகழின் உச்சம் தொட்ட விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் தான் அறையெடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்  இருவரும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்துவிட்டதாக  ஹேமந்த் கூறியுள்ளார். 

நசரப்பேட்டை ஓட்டலில் இருந்து சித்ராவின் உடலை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். நேற்று மத்திய சென்னை ஆர்.டி.ஓ. லாவண்யா மருத்துவமனைக்கு வந்து சித்ராவின் உடலில் உள்ள காயங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்தார். இதையடுத்து இன்று காலை 10 மணிக்கே உடற்கூராய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பாக மருத்துவர் சதீஷ் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார். 


சித்ராவின் மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கையின் மூலமாகவே மர்மங்கள் விலகும் என போலீசார் காத்திருக்கின்றனர். தற்போது ஹேமந்திடம் போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் அரைமணி நேரத்தில் உடற்கூராய்வு நிறைவு பெற உள்ள நிலையில், அந்த அறிக்கையின் அடிப்படையிலும் ஹேமந்திடம் போலீசார் விசாரணையை தொடர திட்டமிட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி சித்ரா - ஹேமந்த் தங்கியிருந்த ஓட்டல் உரிமையாளரிடமும், சின்னத்திரையில் சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூராய்வு முடிந்த பிறகு இருவீட்டாருக்கும் தனித்தனியே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.