தமிழில் மாபெரும் ஹிட்டடித்து 50 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அஜித்-சிவா கூட்டணியின் ‘விஸ்வாசம்’ கன்னட, தெலுங்கு மொழிகளில் டப் ஆகி மிக விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இத்தகவலை கன்னட விநியோக உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர் டோனி ஏ. ராஜ் வெளியிட்டுள்ளார்.

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உடன் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தையே வசூலில் முந்தியது.

குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து 50 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் டோனி ஏ.ராஜ்  தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகமல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் நேற்று  ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆந்திராவில் ரிலீஸாகும் சமயம் தல அஜீத் தனது பிங்க் ரீமேக் படப்பிடிப்பில் ஆந்திராவில்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.