தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் அணி திட்டமிட்டுள்ளது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் ஆலோசித்து முடிவு எடுத்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்தல் செல்லாது எனவும், மறு தேர்தல் நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஓய்வு பெற்ற நீதிபடி முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. தேர்தல் நடந்திருந்தாலும் ஓட்டுகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளன என்பதால் இந்த தேர்தலை செல்லாது என்பதை அறிவிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் பெஞ்சமின், எழுமலை ஆகியோர்கள் தனிதனியாக வழக்குகளை தொடர்ந்தனர்.

தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை, முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக எடுத்து பல கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தேர்தல் செல்லாது. 3 மாதத்திற்குள் புதிதாக நடிகர் சங்கத் தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி நிர்வகிப்பார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்தத் தீர்ப்பு விஷால் தரப்பை அதிர வைத்தது. இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் அணி திட்டமிட்டுள்ளது.