’செல்லமே’படத்தில் அறிமுகமாகி 15வது ஆண்டு நிறைவு நாளை நேற்று கொண்டாடிய நடிகர் விஷால், சுமார் 35 படங்கள் நடித்து முடித்திருக்கும் நிலையில் முதல் முறையாக இளையராஜா இசையில் படம் நடிக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

2004ம் ஆண்டு ஷங்கரின் உதவியாளர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ‘செல்லமே’படத்தில் அறிமுகமான விஷால் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 35 நேரடித் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். அவரது திரதிர்ஷடமோ ரசிகர்களின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை அவருடைய ஒரு படத்தில் கூட இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றவில்லை. இத்தனைக்கும் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் இளைராஜாவின் 75 வது பிறந்தநாளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியது.

இந்நிலையில் தனது படம் ஒன்றுக்கு ராஜா  முதல் முதலாக இசையமைக்கவிருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவிட்ட விஷால்,... “இந்த அற்புதமான நாளில், திரைத்துறையில் எனது 15ஆவது ஆண்டுக்குள் நுழைகிறேன். ’துப்பறிவாளன் 2’ படத்திற்கான இசையமைப்பிற்காக இளையராஜா சாருடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது படத்துக்கு முதன்முறையாக ‘மேஸ்ட்ரோ’ இசையமைப்பதன் மூலம் எனது கேரியர் ஒரு முழுமையான வட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஒரு நல்ல துவக்கம்” என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ராஜாவை தனது தந்தை ஜீ.கே.ரெட்டியுடன் சந்தித்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.

துப்பறிவாளன் 2’படத்தை முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே மீண்டும் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினை நாயகனாகக்கொண்டு ராஜா இசையில் மிஷ்கின் இயக்கிவந்த ‘சைக்கோ’படம் பாதியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.