கடந்த ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான "இரும்புத்திரை" திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் விஷால், சமந்தா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு கோரமுகத்தை திரையில் காட்டிய இந்தப்படம், இளைஞர்கள் கையில் ஒரு செல்போன் மட்டும் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதில் ராணுவ மேஜராக நடித்திருந்த விஷால், தங்கை திருமணத்திற்காக கிடைத்த பணத்தை ஆன்லைன் ஹேக்கர்களிடம் பறி கொடுத்துவிட்டு, அதை மீட்க போராடுவதே இந்த படத்தின் மையக்கரு. இந்தப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. 

இந்த படத்தின் 2ம் பாகத்திற்கு ஆரம்பத்தில் "இரும்புத்திரை 2"  என்றே பெயர் வைக்கப்பட்டது. அதற்கு இயக்குநர் மித்ரன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படத்திற்கு 'சக்ரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் நடிக்கும் அடுத்த அதிரடி படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் இந்த படத்தில், ஷரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காசண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோ பாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 

சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவான "ஆக்‌ஷன்" திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், விஷால் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் விதமாக 'சக்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நுட்ப திகில் குறித்த 'சக்ரா' படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.