கோவையில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, பிரபல எழுத்தாளரும், ஆட்டோ ஓட்டுநருமான சந்திரன், பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர், காமராஜர் சாலை அருகே ஏராளமான ஒடிசாவை சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக வசித்து வருகின்றனர்.  அங்குள்ள ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த 26 வயது கர்ப்பிணிப் பெண்ணிற்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வடமாநில இளைஞர்கள் முயற்சி செய்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் வருவதற்கு வெகு நேரம் எடுத்தது.

மேலும் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பிரபல எழுத்தாளரும்,  ஆட்டோ ஓட்டுநருமான சந்திரனுக்கும் தகவல் சொல்லப்பட்டது.  உடனடியாக அங்கு வந்த அவர்,  பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த, அந்த பெண்ணை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்ல தயாரானார்.  

ஆனால் நடு ரோட்டிலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.  எனினும் கொரோனா அச்சம் காரணமாக, இவருக்கு பிரசவம் பார்க்க அங்கிருந்த பெண்கள் தயங்கிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சந்திரனே அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார்.

இதையடுத்து  ஆம்புலன்ஸ் அங்கு வரவே, குழந்தைக்கு தொப்புல் கொடி நறுக்கப்பட்டு, பத்திரமாக  தாய் - சேய் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

ஆட்டோ ஓட்டுனர் சந்திரனின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இவர், லாக் கப் என்கிற நாவலை உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுதியவர். இந்த நாவல் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு  'விசாரணை' என்கிற பெயரில் இயக்குனர் வெற்றிமாறன் படமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.