வரிசையாக படங்களைத் தொடங்கி அதைப் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் புதுப்படத்துக்கு பூஜை போடும் கவுதம் மேனன் மூன்றாவது முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள். இந்தப்படத்திற்கு பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சுந்தர்.சி. படத்தில் தற்போது நடித்துவரும் சிம்பு அதை முடித்த பிறகு கவுதமுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று நம்பப்படுகிறது. 

முதலில் அந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவுக்கு  நோ சொன்ன சிம்பு , தற்போது ‘96’ சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருப்பதால் மீண்டும் திரிஷாவையே போடலாம் என்று கவுதமிடம் அடம் பிடிப்பதாக தெரிகிறது. 

இந்த நிலையில், இந்த கூட்டணியில் சர்ப்ரைஸாக ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.