’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற மட்டமான படங்களில் இனி நடிக்கமாட்டேன். அப்படத்தில் நடித்ததற்காக மன்னிப்புக்கோருகிறேன்’ என்று களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் நடிகர் விமல் பேசினார்.

இயக்குநர் சற்குணம் உட்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்ட அந்த விழாவில் பேசிய விமல், ‘இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கே கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.அந்த அளவுக்கு போராடி இரவு முழுவதும் கண்விழித்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

நல்ல கதை அமைந்தால் களவாணி 3 ஆம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே நடந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்.அந்தப் படம் படமாக்கப்பட்டதும் டைட்டில் வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள் என்பதால் அந்தப் படத்தில் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

நான் நடித்துள்ள கன்னிராசி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது இதைத் தொடர்ந்து ஜான் பீட்டர்-சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறேன். தவிர மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான மை பாஸ் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகும் சண்டைக்காரி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன்.அதில் எனக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் கேரளாவில் நடைபெற்று முடிந்தது’என்றார் விமல்.ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல், ஆஷ்னாசவேரி உட்பட பலர் நடிப்பில் 2018 டிசம்பர் 7 ஆம் தேதி வெளியான படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அப்படம் வெளியாகி எட்டுமாதங்களுக்குப் பிறகு விமல் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.