தனது மகன் துருவின் முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ ரிலீஸாவதற்குள் அடுத்து மேலும் ஒன்றிரண்டு படங்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவில் அவருக்காக தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார் நடிகர் விக்ரம். இதனாலும் படம் காரணங்கள் எதுவும் சொல்லப்படாமலும் தொடர்ந்து தாமதமாவதால் ‘ஆதித்ய வர்மா’குறித்து படு நெகடிவான செய்திகள் நடமாடுகின்றன.

பாலாவின் இயக்கம் பிடிக்காமல் தூக்கி எறியப்பட்ட பழைய ‘வர்மா’வின் புதிய வடிவமாக ரீ ஷூட் செய்யப்பட்ட ‘ஆதித்ய வர்மா’குறித்து துவக்கத்திலிருந்தே வெளிப்படையான செய்திகள் வருவதில்லை. குறிப்பாக ‘நான் எடுத்த காட்சிகளை உங்கள் படத்தில் பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’என்று இயக்குநர் பாலா விக்ரமுக்கும், தயாரிப்பாளருக்கும் மெஸேஜ் அனுப்பிய பிறகு ‘ஆதித்ய வர்மா’ குரூப் தரப்பில் ஒரு நீண்ட மயான அமைதி. இன்னும் சொல்லப்போனால் பாலாவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் சைலண்டாக இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் போய்த் திரும்பினார்கள்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தொடர்பாக ‘ஆதித்ய வர்மா’வகையறா இதுவரை வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. துவக்கத்தில் ஜூன் மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்ட இப்படம் தற்போது ஆகஸ்ட் மாதம் பாதி கடந்த நிலையில் அப்படியே சைலண்ட் மோடிலேயே கிடக்கிறது. அடுத்து அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு செப்டெம்பர் மாதம் மட்டுமே.அதையும் தவறவிட்டால் தீபாவளிப் போட்டியில் குதிக்கும் அளவுக்கு கெத்தான படம் இல்லை என்பது சம்பந்தப்பட்டவர்க்களுக்கே தெரியும். படம் இப்படி தள்ளிக்கொண்டே போவதற்கான காரணம் பாலாவின் வர்மாவை விட சுமாராக வந்திருப்பதே காரணம் என்கிறது ஒரு தரப்பு. அதனால்தான் ரிலீஸுக்கு முன்பே தன் மகனுக்கு அவசர அவசரமாகக் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் விக்ரம்.