மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வேடத்தில் நடிக்க பலரும் ஓடி ஒளிந்த நிலையில் அந்த வேடத்தில் நடிக்க துணிச்சலாக முன்வந்திருக்கிறார் பிரபல நடிகையும் சரிதாவின் தங்கையுமான விஜி சந்திரசேகர்.

இந்திய சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்பது பயபிக் எனப்படும் சுயவரலாற்றைப் படம் எடுப்பதுதான். அந்த வகையில்  தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் அனைவரும் வெறும் அறிவிப்போடு நிற்க, இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சர்ச்சையான வேடம் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க நடிகைகள் யோசித்தனர். இன்னும் சிலர் பதில் சொல்லாமல் ஓடிஒளிந்த நிலையில் சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

’தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.