போகி பண்டிகை அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யும் அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதி கதாபாத்திரமே அதிகம் ஸ்கோர் செய்திருப்பதாக பாராட்டு மழை பொழிந்து வருகிறது. 

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சோசியல் மீடியாவில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இந்த செயல் தவறான முன்னூதாரணம் என்பதால் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனக்கூறப்பட்டது. 

இந்நிலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: மகன், கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்... வைரலாகும் போட்டோஸ்...!

அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.