தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் எந்த அளவிற்கு இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்களோ... அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் தன்னுடைய ரசிகர்களிடம் அன்பாகவும், எந்த பாகுபாடு இன்றியும் எதார்த்தமாக பழகி வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறும் இவர் தற்போது சபரிமலை விவகாரம் குறித்து கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், கதாநாயகனாக நடிக்கும் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. 

இதனால் இவரிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்,  ஒரு ஆணாக இருப்பது மிகவும் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வலியை அனுபவிக்கின்றனர்.  மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது?  உண்மையில் அது மிகவும் புனிதமானது.  சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என கூறியுள்ளார். 

கேரள மக்கள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் பலர்  பெண்கள் சபரிமலைக்கு வருவதற்கு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படி கூறி உள்ளது புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.