நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.

பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படத்தைத் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர். கன்னடத்தில் ‘99’ என்ற பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது. கோல்டன் ஸ்டார் கணேஷ், பாவனா நடிக்கின்றனர்.


தெலுங்கில் நானி மற்றும் சமந்தா நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இப்படி பெரிய அளவில் இந்தப் படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பிரேம்குமாருக்கு புல்லட் ஒன்றைப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த புல்லட்டின் விலை 3 லட்ச ரூபாய். இன்னொரு இன்ப அதிர்ச்சியாக, இந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவு எண்ணையும் வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி

ஒரு படம் வெற்றியடைந்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அல்லது ஹீரோ, இயக்குநருக்கு கார் பரிசளிப்பது தமிழ் சினிமாவில் வழக்கம். ஆனால், வித்தியாசமாக புல்லட் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி.