vijay thank for mersal hit

இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்தப் படத்தில் இடம்பெற்ற GST மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சிக்கும் விதத்தில் அமைந்த வசனத்திற்கு தேசியக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என போர்க் கொடி தூக்கினர்.

இதே போல் விஜய் பேசிய, மருத்துவர்களுக்கு எதிரான வசனங்களைக் கண்டித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க தலைவர் மற்றும் ஒரு சில மருத்துவர்கள் விஜய் பேசிய காட்சியை நீக்க வேண்டும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் மெர்சல் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சந்தோஷமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் தன்னுடைய முக நூல் பக்கத்தில் இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.