விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் பார்வை திங்கள் கிழமை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமா கமர்ஷியல் என்ற பாதையில் பயணித்த போது, அதன் போக்கை சற்றே மாற்றியவர் புதுமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ஹாலிவுட்டில் திரைக்கதை ஜித்துவான கிறிஸ்டோபர் நோலனின் படங்களைப் பார்த்து அவற்றில் ஊறிப் போய் இருந்தாரோ என்னவோ, அவரைப் போன்றே நியோ நாயர் வகைப் படமாக ஆரண்ய காண்டம் என்ற படத்தை 2011ஆம் ஆண்டில் இவர் இயக்கி இருந்தார். மிகவும் சவாலான திரைக்கதை யுக்திகளில் ஒன்றான நியோ நாயரை இவர் இப்படத்தில் கையாண்ட விதம், சர்வதேச அளவில் பாராட்டையும், விருதுகளையும் இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. பாடல்களை இல்லாத இப்படத்திற்கு பின்னணி இசையின் மூலம் கூடுதல் பலம் கூட்டியவர் யுவன் சங்கர் ராஜா. 

தமிழ் ரசிகர்களிடமும் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா திரைப்படம் இயக்கி வருகிறார். சூப்பர் டீலக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி. இவர் திருநங்கை வேடமிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  வரும் இவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ஷில்பா என்று ஏற்கெனவே கூறப்பட்டது. கேரள முன்னணி நடிகர் பகத் பாசில், சமந்தா,ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் மிஸ்கின் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது. ஆரண்ய காண்டத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். 

விஜய் சேதுபதி படங்களிலேயே வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உள்ளது. இதன் காரணமாகவே படம் குறித்தும், கதை குறித்தும் தற்போது வரை ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் தற்போது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

சூப்பர் டீலக்சின் முதல் பார்வை திங்கள் கிழமை வெளியிடப்படவுள்ளது என்பது தான் அந்த அறிவிப்பு. இதை நடிகர் விஜய் சேதுபதியே அறிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில்  இதுதொடர்பாக விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். அதில், ஒரு வழியா.. கடைசியா,, செம்மையா.. சூப்பரா.. எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவோட சூப்பர் டீலக்சின் முதல் பார்வை அக்டோபர் 8ஆம் தேதி (( திங்கள் )) வெளியாகவுள்ளது என்று உற்சாகம் பொங்க பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.