இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரது கேரக்டர் குறித்துப் பேசிய அருண்குமார்,”விஜய் சேதுபதியோட  மகன் சூர்யாவை சின்ன வயசுலருந்தே  எனக்கு நல்லாத் தெரியும். பயங்கர துரு துரு பார்ட்டி. இதுக்கு முந்தி சின்னச் சின்ன கேரக்டர்ல நடிச்ச சூர்யாவுக்கு கண்டிப்பா இந்தப்படம் ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுக்கும்.

இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்ல வி.சே. வர்றார். சூர்யா திருட்டுத் தொழில்ல அவரோட கூட்டாளியா வர்றார். இந்த பார்ட்னர்ஷிப் எப்பிடிப் பட்டயக் கிளப்பியிருக்குன்னு படம் பாக்குறப்போ தெரிஞ்சுக்குவீங்க’என்கிறார் அருண்குமார்.