ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது.  வரும் 15-ஆம் தேதி வரை, இந்த விழா நடைபெற உள்ளது.  இதில் 60 படங்கள் பங்கேற்கின்றன. 

இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, ஷாருக்கான், அர்ஜுன் கபூர், நடிகை காயத்ரி, தபு, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

இந்த விழாவில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மிகச் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 

விஜய் சேதுபதி, திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படம் திரைக்கு வந்தபோது கூட பலர் நடிகை சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரன்வீர் சிங் நடித்துள்ள 'கலிபாய்', சிறந்த படமாக தேர்வானது. 'அந்தாதும்' படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. இதேபோல் இந்த படத்தில் வில்லியாக நடித்த தபு,  சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.  நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த படத்திற்கான தமிழ் படம் என்கிற ஒரே ஒரு விருது மட்டும் 'பாரம்' படத்திற்கு கிடைத்த நிலையில், தற்போது இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேத்துபதிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.