‘800’என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டதாகவும் அப்படத்துக்கு அவர் வாங்கியிருந்த அட்வான்ஸை திர்ப்புக் கொடுத்துவிட்டதாகவும் வெளியான செய்திகள் பொய்யானவை என்கிறது அப்படக்குழு வட்டாரம்.

இந்தியா முழுக்கவே பயோபிக் எனப்படும் சுயசரிதை படங்கள் எடுக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பந்துவீச்சில் உலக சாதனைகள் பல நிகழ்த்திய முத்தையா முரளிதனுடைய வாழ்க்கை வரலாற்றுப் படமும் அறிவிக்கப்பட்டது. அதில் முரளிதரன் வேடத்தில் மிகப்பெரிய சம்பளத்துக்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் சில அரசியல் கட்சியினர் முத்தையா முரளிதரன் தமிழின விரோதி, அதனால் தமிழ் சமூகப் பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கியிருக்கவேண்டிய ‘800’படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அந்தப் படத்துக்காக ஒதுக்கியிருந்த தேதிகளைத்தான் விஜய் சேதுபதி ‘தளபதி 64’படத்துக்குக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில்’800’படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டதாக தகவல்கள் பரவவே அச்செய்தியை படக்குழுவினர் மறுக்கின்றனர். தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை தயாரிப்பாளர் தரப்பிடம் எடுத்துக்கூறிய விஜய் சேதுபதி அடுத்த ஆண்டில் மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை உறுதியாகத் துவங்கலாம். பிரச்சினைகளைத் தள்ளிப்போட்டால் எப்போதுமே எதிர்ப்புகள் குறையும். அதிலும் தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்புணர்வை நீண்ட நாளைக்கு ஒரே மாதிரி வைத்துக்கொள்ளமாட்டார்கள்’என்று சமாதானப்படுத்தியிருக்கிறாராம். வெறித்தனமான ஐடியாவா இருக்கே பாஸ்...