இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் ‘தளபதி 64’படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதை பட நிறுவனம் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இத்தகவலை விஜய் ரசிகர்களும் விஜய் சேதுபதி ரசிகர்களும் ஒருசேரக் கொண்டாடி வரும் நிலையில் அஜீத் ரசிகர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி.நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘தளபதி 64’படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இப்படத்தின் கதநாயாகியாக அநேகமாக மாளவிகா மோகனன் நடிக்கக்கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், முக்கிய வில்லன் வேடத்தில் விஜய்க்கு இணையான ஒரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க அவர் 10 கோடி சம்பளம் கேட்டு வருவதாகவும் கடந்த இரு தினங்களாக செய்திகள் சிறகடித்து வந்தன.

இந்நிலையில் சற்றுமுன்னர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்யும் செய்தியை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க ரூ 6 முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்று வந்த விஜய் சேதுபதி இப்படத்தின் மூலம் 10 கோடிக்கு உயர்ந்துள்ளார். ஏற்கனவே மாதவனுடன் ’விக்ரம் வேதா’ ரஜினியுடன் ‘பேட்ட’படத்தில் நடித்து தனது இடத்தை விட்டு எந்த வகையிலும் இறங்காத விஜய் சேதுபதி பணத்துக்காக மட்டுமல்ல, அவர் கேரக்டருக்கு இருக்கும் இருக்கும் முக்கியத்துவத்துக்காக ‘தளபதி64’ல் நடிக்க சம்மதித்திருப்பார் என்கிறார்கள்.