தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள 'பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த தீபாவளியை இரட்டை தீபாவளியாக கொண்டாட, விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தற்போது விஜய், ஓய்வு எடுப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால் அங்கிருந்து திரும்பியவுடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு  அக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.  

ஏற்கனவே இந்த படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இப்படம் குறித்த புது புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் 'தளபதி 64 ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பேட்ட' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, வெளியாகியுள்ள தகவலில் 'தளபதி 64 ' படத்தில், விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிக்க உள்ளதாக சில உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அடுக்கடுக்காக அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் நடிப்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி ஒன்று இருந்த நிலையில் இதற்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.


 
விஜய் 64 படத்தை தயாரித்து வரும் XB பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தான், விஜய் சேதுபதி நடித்து வரும் ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தையும் தயாரிக்க உள்ளதால், விஜய் சேதுபதி கால் ஷீட் தேதிகளை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளதால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.