நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்திற்கு அ.தி.மு.க அரசு இடையூறு செய்ய துவங்கியுள்ளதால் திட்டமிட்டபடி அந்த படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் சர்கார் எனும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படம் விவசாயிகள் பிரச்சனை பற்றியது என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தான் விஜய் அரசியல் படத்தில் நடித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில், சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இருப்பதற்கு பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் அதனை தயாரிப்பாளர் தரப்பும், விஜய் தரப்பும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் தான் திடீர் திருப்பமாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ஆகியோருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில் புகைபிடிப்பது போல் காட்சி வைத்து சர்கார் படத்தின் மூலமாக புகையிலை உபயோகத்தை ஊக்குவிக்கும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஒரு கேள்வியும் கேட்டிருந்தது தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை. இதனால் மிரண்டு போன தயாரிப்பாளர் தரப்பு, உடனடியாக தனது சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படத்தை நீக்கிவிட்டது. மேலும் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை தாங்கள் நீக்கிவிட்டதாக, பொது சுகாதாரத்துறைக்கு பதிலும் அனுப்பிவிட்டது சன் பிக்சர்ஸ். தற்போதைக்கு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், சர்கார் படத்திற்கு எதிரான மனநிலையில் தமிழக அரசு இருப்பதையே பொது சுகாதாரத்துறையின் நடவடிக்கை காட்டுகிறது. எத்தனையோ படங்களில் எத்தனையோ ஹீரோக்கள் புகை பிடிப்பது போல் நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்பாத சுகாதாரத்துறை விஜய்க்கு மட்டும் அனுப்பியிருப்பதற்கு காரணம் என்று பல விஷயங்கள் கூறப்படுகின்றன. அதில் முதலாவது விஷயம், சர்கார் படத்தில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்சை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் சர்கார் படத்திற்கு இடையூறு செய்யும் வேலைகள் தற்போதே தொடங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால் சர்கார் வெளியாவதே கூட பெரும் சிக்கலை உருவாக்கலாம் என்கிறார்கள். 

 ஏனென்றால் இப்படித்தான் தலைவா படத்திற்கு டைம் டூ லீட் என்ற சப்டைட்டிலுடன் பெயர் வைக்கப்பட்டது அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தலைவா படத்தை வெளியிட முடியாத ஒரு சூழலை அப்போதைய அ.தி.மு.க அரசு ஏற்படுத்தியது. பின்னர் திரைமறைவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள், பெருந்தலைகளின் தலையீடுகள் மற்றும் விஜய் ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட வீடியோ என எதுவும் வேலைக்கு ஆகவில்லை.  டைம் டூ லீட் என்கிற வாசகத்துடன் சில காட்சிகளையும் நீக்கிய பிறகே தலைவா வெளியானது. இதேபோல் மெர்சல் படத்திலும் ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனங்களால் படம் வெளியாகும் போது சிக்கல் ஏற்பட்டது. மெர்சல் படத்தில் விலங்குகளை துன்புறுத்தியதாக கூறி விலங்குகள் நல வாரியம் மெர்சலுக்கு இடையூறு கொடுத்தது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்த பிறகு பிரச்சனை தீர்ந்தது. இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு விஜய் தற்போது நேரடி அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது பிரச்சனையில் சிக்காமல் தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.