அட்லி இயக்கத்தில் இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான பகுதிகள் அமெரிக்காவில்  படப்பிடிப்பு நடக்க உள்ளது, ஆனால் ஒரு சில காட்சிகள் மட்டும்  சென்னை பின்னி மில்லில் செட் போட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் கூட்டம் கூடியதால் படப்பிடிப்புப் பணிகளை தொடர்வதில் இடையூறு ஏற்பட்டது. 

இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையூறுகள் இல்லாமல் படப்பிடிப்பு பணிகளை தொடர்வதற்காக இடத்தை மாற்றுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு பணிகள் தொடரலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும், எங்கு படப்பிடிப்பை தொடர்வது என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இதேபோல மெர்சல் படப்பிடிப்பின்போதும் ரசிகர்களால் அதிகமான பிரச்சினையை விஜய் சந்தித்தார். இதனாலே வட இந்திய பகுதிகளுக்கு படப்பிடிப்பு பணிகள் இடமாற்றப்பட்டது. விஜய்யின் 63ஆவது படத்தை அட்லீ குமார் இயக்குகிறார். கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

ஏற்கெனவே அட்லீ, விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது உருவாகி வரும் விஜய் 63 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு கேமராமேனாக பணிபுரிகிறார். ரூபன் எடிட்டராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.