ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின்  30 முன்னணி சாதனையாளர்களுல் ஒருவராக இடம்பெற்றுள்ள தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 500 மினிமம் பேலன்ஸ் கூட இல்லாமல் தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட இருந்த கதையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'ஃபோர்ப்ஸ் இந்தியா’ பத்திரிகை ஆண்டுதோறும் இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டில் 30 வயதுக்குள் சாதனை படைத்த 30 இளைஞர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோர் உள்ளனர்.

மேலும், இதில் இடம்பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையையும் விஜய் தேவரகொண்டா பெற்றுள்ளார். தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் வெற்றி நாயகனாக உருவெடுத்த விஜய் தேவரகொண்டா, அடுத்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்தினார். இதையடுத்து, ‘நோட்டா’ என்ற தமிழ் படத்திலும் நடித்தார். இன்னொரு படமான ‘துவாரகா’வும் அதே ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் வரும் வாரம் தமிழில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய், ‘ எனக்கு 25 வயதாக இருந்தபோது நான் கணக்கு வைத்திருந்த ஆந்திரா பேங்கிலிருந்து உங்க கணக்குல ரூ.500 மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கணக்கை முடக்கப்போகிறோம் என்று செய்தி அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்த என் அப்பா, ‘மகனே 30 வயசுக்குள்ள பணம் சம்பாதிச்சு செட்டில் ஆனதாண்டா வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் இருக்கு’ என்றார். இன்று எனது 30வது வயதில் அதை சாதித்திருப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார்.

தற்போது வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்து இதைப்படித்தவுடன் உங்கள் மூளையில் ஒரு பல்பு எரிந்தால் அடுத்த விஜய் தேவரகொண்டா நீங்களேதான்.