தளபதி விஜய் – இயக்குநர் அட்லி 3வது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் – முருகதாஸ் கூட்டணியில் தற்போது, சர்கார் திரைப்படம் தயாராகி வருகிறது. உள்நாடு, வெளிநாடு என படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட, சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், விஜய் – அட்லி கூட்டணியும் 3வது முறையாக இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் ஆகிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்த நடிகர் விஜய், தனது 63வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அட்லிக்கே கொடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு சர்கார்
திரைப்படம் வெளியான பிறகு, வெளியாகும் என கூறப்படுகிறது.

சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவந்து விடும் என்பதால், அடுத்த சில நாட்களிலேயே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றால், ஜனவரி மாதத்தில் ஷூட்டிங் தொடங்கி, தமிழ்ப்புத்தாண்டு நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தயாரிக்க தேனாண்டாள் பிலிம்ஸ்-ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால், தயாரிப்பு தொடர்பான விவரங்களும் சஸ்பென்சாகவே உள்ளன.