சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி, அடுத்த ஆண்டு ஜனவரியில் சூட்டிங்கை தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

விஜய் – அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' மற்றும் 'மெர்சல்' மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அதிலும் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகள் பலவற்றை படைத்தது. விஜய் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் மெர்சல் படைத்தது. 

மெர்சலுக்கு பிறகு விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.

சர்கார் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லியுடன் இணைகிறார். தற்போது வரை பெயரிடப்படாத இந்த படத்திற்கான சூட்டிங் வரும் ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் அடுத்த ஆண்டு தீபாவளி விருந்தாக அட்லி – விஜய் கூட்டணியின் புதிய படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  விஜயுடன் புதிய படத்தில் இணைய உள்ளது குறித்து பேசிய அட்லி, நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்க்காத கதைக்களத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் அட்லி தெரிவித்துள்ளார். 

விஜய் – அட்லி இயக்கும் படத்தை மெர்சலை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

 அதே சமயம் ஏ.ஜி.எஸ் பிலிம்ஸ் நிறுவனமும் விஜய் படத்தை தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. எது எப்படி இருந்தாலும் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சர்கார் வெளியான பிறகே அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. சர்கார் வெளியான பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்க விஜய் சென்றுவிடுவார் என்ற அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.