vijay and ajith planning to oppose rajini

விழாக்களில், ஒரு ஹீரோவை வானளாவ புகழும் மற்றொரு ஹீரோ, நிஜத்தில் அவருக்கு எதிராகவே காய் நகர்த்தி கொண்டிருப்பார். இதுதான் சினிமா அரசியல்.

ரஜினி அரசியலுக்கு வந்தால், ஆதரிப்போம், எதிர்ப்போம் என சினிமா உலகத்தில் இருந்தே இரண்டு விதமான குரல்களும் கேட்டு கொண்டிருக்கின்றன.

ஆனால், சினிமாவில், ரஜினிக்கு நிகராக அதிக ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ள இரண்டு நடிகளான விஜய்யும் அஜித்தும், இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

விஜய் தமது ரசிகர் மன்றங்களை இயக்கமாக மாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அஜித்தோ, ரசிகர்களை தமது சுயநலத்திற்காக பயன்படுத்த போவதில்லை என்று கூறி உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிக்கு சினிமா வெற்றி மற்றும் வசூல் மூலமாக சிம்ம சொப்பனமாக திகழும், விஜயும், அஜித்தும், ரஜினி ரசிகர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுவான ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ளனர்.

டீன் ஏஜ் என்று சொல்ல கூடிய பதின்ம வயதில் உள்ள ஆண், பெண் ரசிகர்கள் இந்த இருவருக்கே அதிகம் உண்டு. 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட சினிமா ரசிகர்களில் பெரும்பாலானோர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களாகவே உள்ளனர்.

ஆனால், ரஜினியை பொறுத்தவரை, 40 வயதுக்கும் மேற்பட்ட ரசிகர்களையே அதிகம் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி அழைக்கப்பட்டாலும், லிங்கா படத்தின்போது அவருக்கு விழுந்த அடியில் இருந்து அவர் மீண்டு வரவே, வெகு நாட்கள் ஆனது. அதேபோல், கபாலி படமும், விநியோகஸ்தர்கள் கையை அதிகமாக கடித்து விட்டது என்றே சொல்லப்படுகிறது.

ஆனால், விஜய் மற்றும் அஜித் படங்கள் அப்படி அல்ல. குறைந்த பட்ச வசூல் உத்திரவாதம் உறுதி. அதே போல் ஏதோ ஒரு படம் கையை கடித்தாலும், அடுத்த படத்தில் அது ஈடுசெய்யப்பட்டு விடும்.

இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்து, ஒரு வேளை உயர்ந்த அந்தஸ்தை பிடித்து விட்டால், அது தம்முடைய அரசியல் வருகைக்கு இடையூறாக இருக்கும் என்று விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை அஜித்தும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் முகநூல் மோதல்களும் குறைந்து விட்டன .

அதனால், ரஜினி எதிர்ப்பு விஷயத்தில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. விஜய்யோ, அஜித்தோ, ரஜினியின் அரசியல் வருகை குறித்து இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

நிச்சயமாக இருவரும் நேரடியாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்பதால், இருவரது ரசிகர்களும், ரஜினிக்கு எதிராகவே செயல்படுவார்கள் என்று கூறுகின்றனர் திரை உலகினர்.

ரஜினி அரசியலுக்கும் வருவது உறுதியாகும் பட்சத்தில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை அவருக்கு எதிராக பயன்படுத்த சில அரசியல் கட்சிகள், இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்து விட்டன என்றே கூறப்படுகிறது.