அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் 3 வது முறையாக கைகோர்த்துள்ள, 63 வது படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் எதிர்ப்பார்த்ததை விட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே கடந்த மாதம், பின்னி மில்லில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும், சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், பிரமாண்ட க்ரீன் மேட் செட் அமைத்து, எடுக்கப்பட்டது. 

இதில் விஜய், நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ள இடத்தையும் அட்லீ தேர்வு செய்து அங்கு, முழு வீச்சில் படப்பிடிப்பிற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி படுவேகமாக அட்லீ இந்த படத்தில் கவனம் செலுத்தி வருவதால், சொன்ன தேதிக்கு முன்பே படப்பிடிப்பை முடித்து, தீபாவளி தினத்திற்கு முன்பே, அதாவது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தளபதி ரசிகர்கள், தீபாவளிக்கு முன்பே தங்களுடைய ரகளையை துவங்கி விடுவார்கள் என்பது உறுதி. அட்லீக்கு இந்த படம் விஜயுடன் இணைந்த ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா? என்கிற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில், இருந்து வருகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை,  ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.