சென்னை சாலிகிராமத்தில், அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா கடந்த 40 வருடத்திற்கும் மேலாக நடத்தி வரும் ரெக்கார்டிங் தியேட்டரை திடீர் என இளையராஜா காலி செய்து தர வேண்டும் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு, அவரது அலுவலகம்  நேற்று பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளையராஜாவிற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு திரையுலகினரை நோக்கி நச் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இளையராஜா ஆரம்பத்தில், அரங்கை காலி செய்ய மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது பிரசாத் ஸ்டூடியோ சார்பில் இளையராஜாவிற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் கூறப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்ற இளையராஜா, வழக்கையும் வாபஸ் பெற்றார். 

இதையடுத்து நேற்று இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறைக்கு சென்று இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை எடுப்பதோடு, தியானம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால்  பிரசாத் ஸ்டூடியோ செல்வதை ரத்து செய்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனால் அது மீறும் வகையில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை பூட்டு உடைக்கப்பட்டு, இசைக்கருவிகள் மற்றும் சில பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. கோலிவுட் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செயலுக்கு தற்போது விசிக மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தன்னுடைய கண்டனத்தை சமூக வலைத்தளம் மூலம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்.. 

தமிழ்நாடு மட்டுமல்ல, இசை உலகமே பாதுகாக்க வேண்டிய 
இசை அறிஞர் இளையராஜா அய்யாஅவர்கள். பிரசாத் ஸ்டுடியோ திருட்டுக்கும்பலின் ரவுடித்தனத்தை திரை உலகம் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்க்கப்போகிறது?இது தான் இசை அறிஞருக்கு நாடு கொடுக்கிற மரியாதையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.