’’நாளை நம் அக்காவும், தங்கையும், மகள்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளையே தைரியமாக வெளியே சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்ற பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியே ஆகவேண்டும்’’ என்கிறார் ‘வடசென்னை’ பட இயக்குநர் வெற்றிமாறன்.

MeToo' விவகாரம் சோஷியல் மீடியாவில் அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கப்படுகிறதா என்று கேட்கப்பட்டபோது, ‘’ நான் அவ்வாறு நினைக்கவில்லை. முன்பெல்லாம் ஊர்ப்பக்கம் குற்றங்கள் நடந்தபோது தட்டிக்கேட்க பஞ்சாயத்து போர்டும் பெருசுகளும் இருந்தார்கள். அப்படி ஒரு பஞ்சாயத்து வைக்கப்படும் இடமாகவே சோஷியல் மீடியாவைப் பார்க்கிறேன்.

மற்ற துறைகளில் எந்த அளவுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளதோ அதே அளவுக்குத்தான் சினிமாவிலும் உள்ளது. இந்தத்துறை தொடர்பான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே சினிமாவில் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பதுபோல் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் சினிமாதுறையை விட கல்வி நிறுவனங்களில்தான் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பதாக நான் கருகிறேன்.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். குற்றம் நிரூபிக்கப்படாமல் எப்படி விசாரிப்பது என்று மெத்தனமாக இருந்தால், அடுத்து தவறு செய்ய இருப்பவர்களுக்கு பயம் போய்விடும். நாளை நம் அக்காவும், தங்கையும், மகள்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளையே தைரியமாக வெளியே சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்ற பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியே ஆகவேண்டும்'’ என்கிறார் வெற்றிமாறன்.
Attachments area