மதுரையில் தமிழக வெற்றிக் கழத்தினர் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கி ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. தற்போது தமிழக வெற்றிக் கழகம் வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கொள்கைத் தலைவர்களின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு, பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் அன்பன் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதையும் படியுங்கள்... தவெக தலைவராக விஜய்.! அரசியலில் ஓராண்டில் சாதித்தது என்ன.? செய்தது என்ன.?
போட்டியை காண வந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவை வெற்றிமாறன் தெரிவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விரைவில் அவர் விஜய் கட்சியில் சேரவும் வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
மறுபுறம் ஆளும் திமுக அரசின் மீது வெற்றிமாறன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேங்கைவயல் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வெற்றிமாறனுக்கு பிடிக்காத காரணத்தால் அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் இந்த விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. சினிமாவில் விஜய் - வெற்றிமாறன் காம்போவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அது கைகூடாமல் போனாலும், அரசியலில் அவர்கள் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 1967, 1977 போல 2026 தேர்தலிலும்! ஃபிளாஷ்பேக்கை சொல்லி அரசியல் அரங்கை அதிரவிடும் விஜய்!
