பாலா தனது அடுத்த படவேலைகளைப் பரபரப்பாகத் துவக்கியுள்ள நிலையில், அவர் தூக்கியடிக்கப்பட்ட ‘வர்மா’ படம் குறித்த செய்திகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. புதிய வர்மா கூட்டணியின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று மதியம் இச்செய்தியை வர்மா தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா, ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இருவருமே தங்கள் ட்விட்டர் பதிவுகளில் உறுதி செய்தனர். 2011ல் ’வெளியான ‘7ம் அறிவு’ படத்துக்குப் பின் இந்தி, தெலுங்குப் படங்களில் மட்டுமே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ரவி. கே. சந்திரன் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பணிபுரியும் தமிழ்ப்படம் இது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஒப்பந்தமானது குறித்து பதிவிட்ட ரவி கே.சந்திரன்...இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டது எனது நணபர்கள் விகரம் மற்றும் தயாரிப்பாளருக்காக மட்டுமல்ல... சூப்பர் டேலண்ட் கொண்ட துருவ் விக்ரமுக்காகவும்தான். இன்னொரு சுவாரசியமான செய்தி இந்தியில் ரீமேக் ஆகிக்கொண்டிருக்கும் இதே ‘அர்ஜூன் ரெட்டி’ ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்துக்கும் என் மகன் சாந்தாதான் ஒளிப்பதிவு செய்கிறார்’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி இன்னும் உறுதிப்படுத்தப் படாமல் இருக்கிறது.