வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று ரிலீஸாவதாக இருந்த டைரக்டர் பாலாவின் ‘வர்மா’வின் ரிலீஸ் தேதி ஒரு மாதத்துக்கும் மேல் தள்ள இருப்பதாக அதன் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 65 கோடி வரை வசூல் செய்த ‘அர்ஜூன் ரெட்டி’ தெலுங்குப் படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் பாலா ரீமேக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்திருந்த நிலையில் காதலர் தினத்தன்று படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதே காதலர் தினத்தன்று கார்த்தி நடித்திருக்கும் ‘தேவ்’, ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’விமலின் ‘களவாணி 2’ உட்பட சுமார் அரை டஜன் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், துருவின் தந்தை விக்ரம் தனது மகனின் முதல் படம் பலத்த போட்டிகளுக்கிடையில் ரிலீஸாவதை விரும்பவில்லை என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், தனது பேட்டி ஒன்றில் படத்தை மார்ச் இறுதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அதன் தயாரிப்பாளர் முகேஷ் ஆர். மேத்தா தெரிவித்திருக்கிறார். உடன் வரும் படங்களுக்காக பின்வாங்குவது பிரஸ்டீஜ் சமாச்சாரம் என்பதால் ‘விலங்குகள் நல வாரியத்திலிருந்து எங்கள் படத்துக்கு கிளியரன்ஸ் சர்டிபிகேட் வராததால் இன்னும் சென்சார் சர்டிபிகேட் வாங்க முடியவில்லை. எனவே படத்தின் ரிலீஸை மார்ச் இறுதிக்குத் தள்ளிவைத்திருக்கிறோம்’ என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார் அவர்.