90-களில் தென்னிந்திய மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். 16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர வரும் சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தமிழ்ப்படம்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  இந்நிலையில், இந்த படத்தில் இருந்து ரொமேண்டிக் சிங்கிள் ஒன்று மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் மாதவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார்.

விஜய்க்கு வில்லியாக நடிக்கும் வரலக்ஷ்மி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்த நாளில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்குமாம்.