தல அஜித்திற்கு ஜோடி கிடைச்சாச்சாம்...! 'வலிமை'யுடன் தமிழில் ரீ-எண்ட்ரீ கொடுக்க ரெடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!
நடிகர் ஜெய் நடித்த 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நாயகியாக அறிமுகமானவர் யாமி கவுதம். இந்தப் படம் வெளியாக தாமதமானதால் பாலிவுட் பக்கம் திரும்பிய அவர், படம் ரிலீசானபோது ஹிந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்து விட்டார்.
அதன்பிறகு தமிழ் பக்கமே தலைவைத்து படுக்காத யாமி கவுதம், தொடர்ந்து 'சர்கார்-3', 'காபில்', 'சனம்ரே', 'யூரி-தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துவிட்டார். அதோடு, தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார்.
தற்போது இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவரும் யாமி கவுதம், நீண்ட காலத்திற்குப்பிறகு மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம். அதுவும் தல அஜித்துக்கு ஜோடியாக. 'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகவுள்ள படம் 'வலிமை'. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார்.
இதில், அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, நஸ்ரியா நசீம், பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக தற்போது, யாமி கவுதம் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'வலிமை' படத்தின் ஷுட்டிங், வெள்ளிக் கிழமை (டிச.13) தொடங்குகிறது.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகும் 'வலிமை' படத்தை, 2020 தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.