இன்று நடந்த நாடாளுமன்றப் பதவியேற்பில் தமிழக எம்பிக்கள் அத்தனைபேரும் தமிழ் மொழியில் பதவியேற்றக்கொண்டதுடன் ‘தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டதை  கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

17ஆவது மக்களவையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வான எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் பதவி பிரமாணத்தை தமிழில் எடுத்துக்கொண்டனர். மேலும் பதவி பிரமாணத்தின் இறுதியில் அவர்கள்தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் விடுத்தனர். அதில் பெரும்பாலான எம்பிக்கள் பெரியாரின் பெயரை உரக்க உச்சரித்து தமிழ் மண்ணின் பெருமையை உயர்த்திப்பிடித்தனர்.  இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் தமிழ் வாழ்கஎன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அவர்களது தமிழ்ப்பற்றை மெச்சிப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,...நாடாளுமன்றத்தில் தமிழில் 
உறுதிமொழி ஏற்ற
தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும் 
எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.
சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.
பயணிப்போம் - மொழி காக்க;
தமிழையும் ஆட்சிமொழி ஆக்க. என பாராட்டி மகிழ்ந்திருந்தார்.

முன்னதாக நேற்று தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை அனைவரும் ஏற்று தமிழைப் பெருமைப்படுத்தியதை வலைதள வல்லுநர்கள் கொண்டாடி வருகின்றனர்.