ராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்தி சண்டை'. படம் நவம்பர் 18ம் தேதி வெளியீடாக இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஷால், வடிவேலும், இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வடிவேலு பேசியது, "ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அதற்கு காரணம் மக்கள் தான்.
எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் நான் தான் கார்டூன் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள். இதற்கு என்னுடைய உழைப்பு தான் காரணம். 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
'கத்தி சண்டை' என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை. இக்கதையைக் கேட்டவுடன், என்னுடைய கதாபாத்திரம் என்ன எனக் கேட்டேன். டூபாக்கூர் மருத்துவரா எனக் கேட்டேன். டூபாக்கூர் மாதிரியே இருக்கும், ஆனால் டூபாக்கூர் மருத்துவர் கிடையாது என்று சொன்னார் சுராஜ்.
கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை. நிறைய கதைகளைக் கேட்டேன், அப்படிக் கேட்ட கதைகளில் பிடித்த கதை இந்த 'கத்தி சண்டை'. படம் பார்க்கும் மக்கள், முழுமையாக சிரித்துக் கொண்டே பார்ப்பது போன்று ரொம்ப அற்புதமாக இயக்கியிருக்கிறார் சுராஜ்.
விஷாலுடன் திரையில் எனது முதல் படம் 'திமிரு'. அது வெற்றி. ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அவரோடு இணையும் மூன்றாவது படம் 'கத்தி சண்டை'. கண்டிப்பாக இதுவும் வெற்றி தான். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனது" என்று பேசினார் வடிவேலு.
