கடந்த நான்கைந்து வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல்  வீட்டில்  ‘ச்சும்மாவே’ இருந்து வந்த நகைச்சுவைப் புயல் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் முழுமூச்சாகக் களம் இறங்கவிருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார்.

காமெடியனாக நடிக்கும்போது வருடத்துக்கு பத்து முதல் பதினைந்து படங்கள் வரை நடித்துக்கொண்டிருந்த காமெடியன் வடிவேலு சோலோ ஹீரோவாக நடிக்கத்துவங்கி படங்களைக் குறைத்துக்கொண்டார். அவரைப் பெரிய ஹீரோவாக உயர்த்திய சிம்பு தேவனின் ‘இம்சை அரசன் 23ம்புலிகேசி’க்கு அடுத்த படியாக அதனது இரண்டாம் பாகமான ‘24ம் புலிகேசியிலும் ஒப்பந்தமான வடிவேலு கொடுத்த டார்ச்சரால் துவங்கிய சில தினங்களிலேயே அப்படம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் ‘24ம் புலிகேசி’ படத்தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கர் கொடுத்த புகாரால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. இப்பிரச்சினை குறித்துப் பேசித்தீர்க்காமல் வெட்டி ஈகோ பார்த்த வடிவேலு சுமார் 4 ஆண்டுகளாகவே வீட்டில் சும்மாவே உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் ‘பேய்மாமா’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக இணையதளங்களில் ஒரு டிசைன் இன்று காலைமுதல் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தியை வடிவேலு தரப்போ, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தரப்போ ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை. கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய்ப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ செம துட்டுப் பார்த்த படம் என்பதால் வடிவேலுவுக்கும் பேய்ப்படம் பண்ணும் ஆசை வந்திருக்கலாம்.