தமிழ்சினிமாவில் படங்களின் எண்ணிக்கை குறித்து எந்தவித பதட்டமும் கொள்ளாமல் மிக நிதானமாக இயங்கிவருபவர் வெற்றிமாறன்.  ‘பொல்லாதவனில் துவங்கிய அவரது 11 வருட பயணத்தில் ‘வடசென்னை’ வெறும் நாலாவது படம்தான் என்பதே அவரது நிதானத்துக்கு சாட்சி.

வடசென்னை’யை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அவை கொலை, ரத்தம் என்று வன்முறை அதிகம் சார்ந்த திரைப்படங்களாக மட்டுமே இருந்தன. மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்கள், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படங்கள் வந்தது குறைவுதான்.

இந்த ‘வடசென்னை’யை ரத்தமும் சதையுமாக மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படமாக இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை நாமும் வடசென்னைக்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது.

முதல் பாதியில் சிறைச்சாலையும், அவர்கள் வசிக்கும் பகுதியும் எது செட், எது நிஜம் என்று தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோர் நம்மை அந்தப் பகுதிவாசியாகவே மாற்றிவிடுகிறார்கள்.

இப்படத்தின் கதை என்ற ஒன்றை மற்ற படங்களின் கதைபோலவே எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சிக்கலாம்.

ஒரு வழக்கில் சிறைக்கு வருகிறார் தனுஷ். அவரை சிறைக்குள்ளிருக்கும் பவன் ஆட்கள் மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இதனால், பவனின் எதிர்கோஷ்டியான செந்தில் தயவு தனக்குக் கிடைத்தால் நல்லது என நினைக்கிறார் தனுஷ். கேரம் பிளேயரான தனுஷ், அதை வைத்தே கிஷோரை நெருங்கி நட்பு கொள்கிறார். சிறைக்குள் ஒரு நாள் நடக்கும் கேரம் போட்டியில் கிஷோரையே கொலை செய்ய முயற்சிக்கிறார். தனுஷால் குத்து வாங்கும் கிஷோர் நரம்பு பாதிக்கப்பட்டு பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பாதிக்கப்படுகிறார். தனுஷ் ஏன் கிஷோரைக் கொலை செய்ய முயற்சித்தார்.  ஆனால் இப்படி எளிமையாக சொல்லும்படி இல்லாமல் தனது மாயாஜால திரைக்கதை மூலம் நம்மை திரைக்குள் கட்டிப்போடுகிறார் வெற்றி.


இன்னொரு கிளைக்கதையில், கிஷோர், சமுத்திரக்கனி, பவன் அனைவருமே கடத்தல் தொழில் செய்யும் அமீரிடம் வேலை பார்த்தவர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அமீரால் அவமானப்படுத்தப்பட அவரைக் கொலை செய்து மூவருமே பெரிய ஆளாகிறார்கள். அந்தக் கொலையாலேயே கிஷோரும், சமுத்திரக்கனியும் பிரிகிறார்கள். பவன், சமுத்திரக்கனியின் நண்பர். இவர்களுக்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம்? என்று போகிறது கதை.

அன்பு என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் பார்க்கிற ஆடியன்ஸை வியப்பின் எல்லைக்கே கொண்டுசெல்கிறார். இதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கவேண்டும் என்பதெல்லாம் சின்ன சிபாரிசுதான்.

வாயைத்திறந்தாக் கெட்ட வார்த்தைகளைக் கொட்டித்தீர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நடிகையாக இன்னும் உயரே உயரே போய்க்கொண்டிருக்கிறார்.

ஆன்ட்ரியாவை தமிழ் சினிமா அவ்வப்போது இப்படி பயன்படுத்திக் கொள்கிறதே என மகிழ்ச்சிதான். மேற்கத்திய பாணி நடிகையை வடசென்னைவாசியாகவே மாற்றிவிட்டார்கள். கணவனைப் பறி கொடுத்த ஆத்திரத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் மிரட்டல். இரண்டாம் பாகத்தில் ஆன்ட்ரியாவின் ஆவேசத்தை இன்னும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

கிஷோர், சமுத்திரக்கனி படத்தில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை, நடிப்பிலும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் கூடவே டேனியல் பாலாஜி, பவன், சுப்பிரமணிய சிவா, ராதாரவி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் அவ்வளவு யதார்த்தம்.

அளவான கானா பாடல்கள், அதையும் அளவெடுத்த வகையில் மிகக்குறைவான இடங்களில் பின்னணி இசை என்று பின்னிப்பெடலெடுக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

குப்பத்திலும், சிறைச்சாலையிலுமாக 90 சதவிகிதப் படம் நகர்கிறது. ஆனால் இரண்டே லொகேஷன்களில் கதை நடக்கிற சலிப்பு ஒரு இடத்திலும் இல்லாமல் மிக அபாரமான திரைக்கதையால் படம் முழுக்க நம்மைக் கட்டிப்போடுகிறார் வெற்றிமாறன்.
‘பொல்லாதவன்’ ஆடுகளம்’ விசாரனை’க்குப் பின்னர் தனது நான்காவது படத்தையும் மிக உயர்ந்த தரத்தில் தந்த வகையில் தமிழ்சினிமாவின் வெற்றிமாறனேதான் இவர்.

’வடசென்னை’ செம கெத்து.