’டிசம்பரில் ‘மாரி 2’ படத்தை ரிலீஸ் பண்ணியே தீருவேன். இது குறித்து நடிகர் விஷாலின் கருத்தையோ தயாரிப்பாளர் சங்கத்தின் சட்டதிட்டங்களையோ பின்பற்ற வேண்டிய அவசியம் எனக்கு  இல்லை’ என்று தனுஷ் பிடிவாதமாக இருப்பதைத் தொடர்ந்து கோடம்பக்கம் பரபரப்பாகியுள்ளது.

சிறு படங்களை நெறிப்படுத்தும் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்களும் பஞ்சாயத்துக்களும் இல்லாத நாளே இல்லை என்னும் நிலையில், பற்றி எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

தயாரிப்பாளர் சங்கத்தால் டிசம்பர் மாத ரிலீஸ் படங்கள் என்று ஒரு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்கூட்டியே பதிவு செய்யப்படாததால் தனுஷின் ‘மாரி2’ பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் சங்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் தனது படத்தின் டீஸர், ட்ரெயிலர் ஆகியவற்றை வெளியிட்டு வரும் தனுஷ் படத்தையும் டிசம்பர் 21ல் வெளியிட்டே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

அதே தேதியில் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ படமும், சங்கத்தின் அனுமதி பெற்ற இன்னும் சில படங்களும்  ரிலீஸாக இருப்பதால் அப்படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்னும் நிலையில் நாளை தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது வெறுமனே ‘மாரி2’ படத்துக்கான மோதல் அல்ல. மாமனாரின் படம் ரிலீஸாகியுள்ள ‘2.0’ தியேட்டர்களைக் கைப்பற்றி, அஜீத்தின் ‘விஸ்வாசத்துக்குப் போய்விடாமல்,  மீண்டும் பொங்கலுக்கு அதே மாமனார் கையில் ‘பேட்ட’ ரிலீஸுக்கு ஒப்படைக்க விரும்பும் தனுஷ் இக்கூட்டங்களை கொஞ்சமும் மதிக்கமாட்டார் என்றே தகவல்கள் வருகின்றன.