TVK Vijay Forms New Advisory Panel : தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தன்னுடைய பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களை பாதுகாக்க புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார். இதுகுறித்த மேலும் விவரங்களை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து, தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தன்னுடைய தமிழக வெற்றி கழக கட்சியின் பெயர் மற்றும் கொடி போன்ற அனைத்தையும் அறிவித்த விஜய், இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தற்போது பரபரப்பாக தயாராகி வருகிறார். மேலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய், விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், போன்ற இடங்களில் சனிக்கிழமை தோறும் மாநாடு நடத்தி மக்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
கரூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்த போது, எதிர்பாராத விதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தை மட்டும் இன்றி, தவெகை கட்சியினரையும் அதிகம் பாதித்தது. இதனால் விஜய் பெயரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், சமீபத்தில் தான், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியதோடு, தலா 20 லட்சம் இழப்பீடு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தவெக கட்சி சார்பாக, புதிய குழு ஒன்றை நியமிக்க விஜய் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எக்ஸ் ஐஜி தலைமையில் மக்களை பாதுகாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.. அதன்படி ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப்பட்டு, தொண்டர்கள் அணிக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் பத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக எக்ஸ் டி எஸ் பி ஷபிபுல்லா, எக்ஸ் டி எஸ் பி சிவலிங்கம், எக்ஸ் டி சி அசோகன், உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பிரச்சார நேரங்களில் கூட்டத்தை ஒடுக்குவது குறித்து (crowd management) குறித்த ஆலோசனைகளை இவர்கள்தொண்டர்களுக்கு வழங்கி உள்ளனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 468 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வார்கள் கூறப்படுகிறது.
இந்த குழு அமைக்க முக்கிய காரணம், இனி விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்படும் பாதுகாப்பு பணியால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. என்பதற்காகவே இந்த குழுவை பிரத்தியேகமாக விஜய் உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
