நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர், பாடகர்கள் என ஒருவர் விடாமல் பாலியல் புகார் கூறி வரும் நடிக ஸ்ரீரெட்டிக்கு முதல் முறையாக ஒருவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம டி.ஆர் தான்.

தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாக ஸ்ரீரெட்டி இதுநாள் வரை குற்றஞ்சாட்டி வந்தார். நடிகர் நானி தன்னை நீண்ட நாட்களாக யூஸ் செய்ததாகவும் ஆனால் வாய்ப்பு தரவில்லை என்றும் வெளிப்படையாகவே ஸ்ரீரெட்டி தெரிவித்தார். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகை விட்டுவிட்டு தமிழ் திரையுலகம் பக்கம் ஸ்ரீரெட்டி பார்வை திரும்பியுள்ளது.

முதலில் இயக்குனர் முருகதாஸ் தன்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஸ்ரீரெட்டி கூறினார். தொடர்ந்து நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் தன்னை தேவையான அளவிற்கு பயன்படுத்திவிட்டு வாய்ப்பு தரவில்லை என்று தெரிவித்து இருந்தார். இதனால் தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆதாரம் இல்லாமல் ஸ்ரீரெட்டி பேசக்கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் முறையாக ஒரு திரையுலக பிரபலம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆரிடம், ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டி.ஆர், திரையுலகில் இருக்கும் நபர்கள் முதலில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். திரையுலகில் இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்று நான் கூறமாட்டேன். திரையுலகில் பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

நான் திரைப்படங்களில் நடித்த போது பெண்களை தொட்டு கூட நடிக்க மாட்டேன். ஆனால் சிலர் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கே தெரியும். ஸ்ரீரெட்டி விவகாரத்தில், குற்றச்சாட்டுகளை கூற ஸ்ரீரெட்டிக்கு உரிமை உள்ளது. ஸ்ரீரெட்டி புகார் கூறும் பட்சத்தில் புகாருக்கு ஆளானவர்கள் பதில் அளிக்க வேண்டியது கட்டாயம். அவர்களிடம் சென்று மைக்கை நீட்டுங்கள், அவர்கள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு டி.ஆர். கூறினார்