சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படமும், தல அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படமும் இந்த தைப்பொங்கலுக்கு வெறித்தனமாக மோதுகின்றன. இந்த சூழலில், தங்கள் படங்களை வெல்ல வைக்க இரண்டு தரப்பு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ரசிகர்களும் தீப்பிடிக்க பிடிக்க மோதிக்கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் வேட்டு வெடிக்கிறது இரண்டு படங்களுக்கான ப்ரமோஷன்களிலும். 

ரஜினி மற்றும் அஜித் இருவரிடையே இந்த படங்களை தொட்டு உருவாகியிருக்கும் மோதல் குறித்து நமது ஏஸியாநெட் இணையதளம் ஸ்பெஷல் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அது இரு தரப்பின் வட்டாரங்களில் தாறுமாறாக வைரலாகியது. சில ஊடகங்களை அதை விவாத பொருளாகவும் மாற்றியது தனி கதை. 

இந்நிலையில் பேட்ட படத்தின் ஆடியோ ஆல்பம் ஒரு வாரத்துக்கு முன்பே வெளியாகி ஹிட் அடித்துவிட்டது. விஸ்வாசத்தின் ‘அடிச்சு தூக்கு’ பாடலுக்கும்,  பேட்ட படத்தின் ‘ மரண மாஸ்’ பாடலுக்கும் இடையில் பெரும் போரே நடந்து கொண்டிருக்கிறது. ‘எது கெத்து, எது மாஸ்? எது அடிச்சு தூக்குது?’ என்று இரு தரப்பு ரசிகர்களும் முட்டி மோதி மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் இணைய தளத்தில்.

இந்த சூட்டில் தல ரசிகர்கள் தாறுமாறாய் சந்தோஷிக்கும் விதமாக அவரது அடுத்த இரண்டு படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. விஸ்வாசத்துக்கு அடுத்து, இந்திப்படமான ‘பிங்க்’ ரீமேக்கில், விநோத் இயக்கத்தில் நடிக்கிறார். இதையும், இதற்கு அடுத்தும் ஒரு அஜித்தின் படத்தையும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

முதல் படத்துக்கான பூஜை போடப்பட்டுவிட்ட நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஸியன்கள் குறித்து இணைய தளங்களில் பரவும் தகவல்களில் பாதி போலியாக உள்ளன. குறிப்பாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னும், ஏ.ஆர்.ரஹ்மான் என்று தொடர்ச்சியாக ஒரு தகவல் பரவியது. அதேபோல் போனிகபூர் தயாரிப்பில் அஜித்தி இரண்டாம் படம் பற்றி சில நெகடீவ் கமெண்டுகளும் பரவுகின்றன. இதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கங்கள் மெதுவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சூழலில்தான் அஜித், அதிரடியாக ஒரு முடிவெடுத்திருக்கிறாராம். அதாவது இனி தனது படங்கள் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டாம், பத்திரிக்கைகள் மூலமாக முறைப்படி தெரிவியுங்கள்! என்று கூறியிருக்கிறாராம். அஜித் சொன்ன ஆர்டருக்கு இணங்க, ‘சோஷியல் மீடியாக்களில் அஜித் படங்கள் பற்றி வரும் தகவலை நம்ப வேண்டாம்!’ என்றும் அவரது பி.ஆர்.ஓ. தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

இதுதான் தல ரசிகர்களுக்கு பெரும் தலை சுற்றலையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது. இதுபற்றி புலம்பும் அவர்கள்...”இன்னைக்கு எல்லாமே இணையதளம்தான். வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகதான் நல்லதும் தீயா பரவுது, கெட்டதும் தீயா பரவுது. இந்த சமூக ஊடகங்களை சினிமாக்காரங்க ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்து, இலவசமா விளம்பரங்களை உருவாக்கி கோடிக்கணக்குல பணத்தை மிச்சப்படுத்துறாங்க. 
இந்த சூழ்நிலையில தல அஜித் இப்படியொரு முடிவை எடுத்தது பெரிய தப்பு. அல்லு சில்லு ஹீரோக்களோட படத்துக்கு கூட ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக்குன்னு சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணி விளம்பரப்படுத்துறாங்க. ஆனா நாடே கொண்டாடுற தல இப்படி முடிவெடுக்கலாமா?

எழுபது வயதை நெருங்குற ரஜினி சார் ஒவ்வொரு நாளும் இளமையாகிட்டே போறார். இளம் இயக்குநர்கள் கூட, புதுப்புது கதையில, இளம் ஹீரோயின்கள் மற்றும் யூத் நடிகர்கள் கூட நடிச்சு தன்னை யங்கா ஃபீல் பண்றார். ஆனால் தல யோ சிறுத்தை சிவா கூட நாலாவது படம் பண்ணி எங்களை படுத்துறார். 

ரஜினி சார் படத்தோட பாடல்களை மொபைல் வழியா மக்களே ரிலீஸ் பண்ற மாதிரி வெச்சு கலக்கிட்டாங்க. ஆனா தல!யோ தினசரி பேப்பர்ல அறிவிப்பு கொடுக்க சொல்றார். இதெல்லாம் படத்துக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு!ன்னு அவர் யோசிக்க மாட்டாரா?
இந்த வயசிலும் ரஜினி அப்டேட் ஆகிட்டே போக, 47 வயசே ஆகுற எங்க தல அவுட்டேட் ஆகிறாரே!” என்று பொங்குகிறார்கள். 
தல....இவங்கள கொஞ்சம் கவனி தல!