பொங்கலுக்கு அஜித், ரஜினி படங்கள் போட்டியின்றி சொகுசாக ரிலீஸ் ஆகி வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் ரிலீஸாவதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெய்ட்டிங்கில் இருக்கின்றன.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதமே படங்களுக்கு முறையான தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திணறி வந்தனர். படத்தை ரிலீஸ் பண்ணமுடியாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடுத்து பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு பெரும்படங்களுக்கு வழிவிட்டுக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் பலரும் பிப்ரவரி மாதத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யக் காத்திருக்கின்றனர்.

ஆனால் இப்படிக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 20க்க்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று மட்டும் ஆறு முதல் எட்டு படங்கள் வரை ரிலீஸாகலாம் என்று தெரிகிறது. இப்படிமொத்தமாக ரிலீஸ் செய்யும்பொழுது தியேட்டர் பஞ்சாயத்துகள் மறுபடியும் களைகட்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமிருக்காது.

பிப்ரவரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் படங்களின் பட்டியலில் சாம்பிளுக்கு சில...பாலாவின் ‘வர்மா’, ராமின் ‘பேரன்பு’,கார்த்திக்கின் ‘தேவ்’ சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’,ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’,சற்குணத்தின் ‘களவாணி 2’,ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’ ‘பூமராங்’, ‘கழுகு 2’ ‘வாண்டு’, ‘தாதா 87’ என்று நீளுகிறது அந்த கியூ.